×

அழகு முருகனின் அழகிய திருத்தலங்கள்

  • பன்னிரண்டு கரங்களோடு போர்த்தளபதி திருக்கோலத்தில், அதேசமயம் தம்பதி சமேதராக முருகப் பெருமானைத் தென்சேரிகிரி தலத்தில் தரிசிக்கலாம். இத்தலம் பல்லடம், உடுமலைப்பேட்டை பாதையில் உள்ளது.
  • பிரணவத்திற்குப் பொருள் தெரியாத நான்முகனை சிறையில் அடைத்த ஐந்துமுக முருகப் பெருமானை ஓதிமலையில் தரிசிக்கலாம். கோவை மேட்டுப்பாளையம் அருகில் உள்ள இத்தலத்தில் நான்முகன் அடைபட்ட இரும்புச் சிறையும் உள்ளது.
  • பக்தர்கள் கனவில் வந்து தன் ஆலயத்திலுள்ள கண்ணாடிப் பெட்டியில் ஏதேனும் பொருளை வைக்கச் சொல்லி உத்தரவிடும் முருகனை காங்கேயத்தில் தரிசிக்கலாம். முருகன் உத்தரவுப்படி வைக்கப்பட்ட பொருள், சம்பந்தமாகவே அவ்வருட நிகழ்வுகள் நடப்பது அற்புதம். இத்தலத்தை சிவன்மலை என்றும் அழைக்கின்றனர்.
  • கோவில்பட்டிக்கும் சங்கரன் கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில், வழக்கத்திற்கு மாறாக, இடப்புறம் திரும்பியுள்ள மயில்மீது ஆரோகணித்து வீற்றிருக்கிறார் முருகப்பெருமான்.
  • கையில் கரும்பேந்தி அருளும் கந்தனை திருச்சிக்கு அருகே உள்ள செட்டிகுளத்தில் காணலாம்.
  • குறமகளான வள்ளியம்மையுடன், முருகப்பெருமான் கருவறையில் வீற்றிருக்கும் அற்புத தரிசனத்தை குமரி மாவட்டம், தக்கலையிலிருந்து 5.கி.மீ தொலைவில் உள்ள குமார கோயிலில் தரிசிக்கலாம்.
  • மாமல்லபுரம் – கல்பாக்கம் பாதையில் உள்ள திருப்போரூரில் என்றும் வற்றாத திருக்குளத்துடன் கூடிய ஆலயத்தில் பனைமரத்தால் ஆன சுயம்பு மூர்த்தியான முருகப் பெருமானை தரிசிக்கலாம். சிதம்பரசுவாமிகளால் நிறுவப்பட்ட சக்கரம் இத்தலத்தில், முருகப் பெருமானுக்குச் சமமாக போற்றப்படுகிறது.
  • தென்காசியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள திருமலைக்கேணி குமாரசுவாமி ஆலயத்தில் வஜ்ராயுதம் ஏந்திய அழகே உருவான முருகனை 645 படிக்கட்டுகள் கொண்ட மலையில் ஏறி தரிசிக்கலாம்.
  • திருச்சி – மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து 26.கி.மீ தொலைவிலுள்ள விராலிமலையில் ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்தபடி முருகப்பெருமான் அருள்கிறார். அவருக்கு இரு புறமும் வள்ளியம்மையும், தெய்வானையும் நின்றிருக்கிறார்கள்.
  • அருணகிரிநாதருக்கு திருப்புகழைப் பாடும் திறமையை அருளிய முருகப்பெருமானை, திருச்சிக்கு அருகே உள்ள வயலூர் திருத்தலத்தில் கண்டு மகிழலாம்.
  • திருவாரூரிலிருந்து 13கி.மீ தொலைவில் உள்ள எண்கண் தலத்தில், எட்டுக்குடி மற்றும் சிக்கல் தலங்களில் உள்ள அதே தோற்றத்தில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.
  • காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கும், காமாட்சி அம்மன் ஆலயத்திற்கும் இடையில் சோமாஸ்கந்த அமைப்பில் குமரக் கோட்டம் ஆலயத்தில் கச்சியப்பருக்கு கந்தபுராணத்தை இயற்ற, `திகடச் சக்கர’ எனும் முதல் அடி எடுத்துக் கொடுத்த வேலவனைதரிசிக்கலாம்.
  • நாகை, தில்லையாடிக்கருகில் உள்ள திருவிடைக்கழி தலத்தில் குஹ சண்டிகேஸ்வரரோடு அருள்கிறார் முருகப்பெருமான். இது அபூர்வமான அமைப்பு.
  • கோவைக்கு அருகில் உள்ள அநுவாவி திருத்தலத்தில் சஞ்சீவிமலையைத் தூக்கிச் சென்ற அனுமனின் தாகத்தை தீர்த்த அழகு முருகனைதரிசிக்கலாம்.
  • கோவை கிணத்துக்கடவு எனும் கனககிரியில் உள்ள பொன்மலையில் முருகப் பெருமான் கோயில் கொண்டிருக்கிறார். இவரை பார்வை இழந்த அடியவர் ஒருவர், “விழிக்குத்துணை உன் மென்மலர்ப்பாதங்கள்’’ என திடமாக நம்ப, அதிசயமாக அந்த அடியவர்க்கு பார்வையை மீட்டுத் தந்தவர் இந்த முருகன்.
  • கல்லால் செதுக்கப்பட்ட வேலை தன் கரத்தில் ஏந்தி செங்கோடன், செங்கோட்டையன் எனும் திருப்பெயர்களில் முருகப் பெருமானை சேலத்திலிருந்து 28.கி.மீ தொலைவில் உள்ள திருச்செங்கோடு தலத்தில் காட்சி தருகிறார்.
  • சென்னை பாரிமுனையில், கந்த கோட்டத்தில் செல்வமுத்துக்குமார சுவாமியாக தரிசனம் தரும் முருகன், வள்ளலாரால் மகிழ்ந்து வழிபடப்பட்டவர்.
  • திருநெல்வேலியிலிருந்து 3.கி.மீ தொலைவில் உள்ளது இலஞ்சி. தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தானே மும்மூர்த்திகளாகவும் இருந்து செயல்படுவதை உணர்த்திய முருகப்பெருமானை வரதராஜப்பெருமாள் என்ற பெயரில் தரிசிக்கலாம்.
  • தென்காசிக்கு 6கி.மீ தொலைவில் உள்ள ஆய்க்குடியில் மழலைவரம் வேண்டுவோர்க்கு படிப்பாயசம் பிராத்தனை மூலம் அருளும் குழந்தை வடிவ குமரனை கண்குளிர காணலாம்.
  • சென்னை திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தின் பிராகாரத்தில் சிங்காரவேலவனாக மயில் மீதமர்ந்த முருகப் பெருமானை தனித்தனியே யானைகள் மீது அமர்ந்த தேவியருடன் தரிசிக்கலாம்.

தொகுப்பு: அனந்த பத்மநாபன்

The post அழகு முருகனின் அழகிய திருத்தலங்கள் appeared first on Dinakaran.

Tags : Lord Murugan ,Anantha Padmanaban ,Beauty ,Murugan ,
× RELATED மிஸ்கூவாகம்-2024 அழகி போட்டி: விழுப்புரத்தில் நடந்தது